கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி
குறிப்பு: இந்தக் கட்டுரை நற்செய்தித் தொடரின் ஒரு பகுதியாகும்; இது கிறிஸ்து நமக்காக மரித்தார் என்ற கட்டுரையின் தொடர்ச்சி.
வேதத்தின்படி, மனித இனத்தில் பிறக்கிற ஒவ்வொருவரும் ஆவிக்குரியபிரகாரமாக மரித்தவர்களாகவும், தண்டனைத் தீர்ப்புக்குட்பட்டவர்களாகவும், பாவத்தினால் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டவர்களாகவும் பிறக்கிறார்கள்; கிறிஸ்து இல்லாமல் மரித்தால், “இரண்டாம் மரணமாகிய” அக்கினிக்கடலை அடைவார்கள். மேலும், நம்முடைய நீதிகளெல்லாம் அழுக்கான கிழிந்த ஆடையைப்போல இருக்கின்றன என்று தேவன் அறிவித்திருப்பதால், மனிதன் தன்னைத் தானே இரட்சித்துக்கொள்ள எதையும் செய்ய முற்றிலும் இயலாதவனாகவும், உதவியற்றவனாகவும், நம்பிக்கையற்றவனாகவும் இருக்கிறான். ஆனாலும் தேவன் தம்முடைய இரக்கத்தினால், மரித்து நம்முடைய பாவங்களுக்கான விலையைச் செலுத்தும்படி இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். அவர் அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு ஏறிச்சென்றார். எல்லோருக்காகவும் தம்மைத் தாமே மீட்கும்பொருளாகக் கொடுத்த ஒரே மத்தியஸ்தராகிய இயேசு கிறிஸ்துவே, மரித்த, தண்டனைத் தீர்ப்புக்குட்பட்ட பாவிகள் இரட்சிக்கப்படுவதற்கான ஒரே வழி. மரணத்திற்குப் பின் ஜீவனையும், தண்டனைத் தீர்ப்பு இல்லாமையையும், இந்தப் பூமிக்குரிய வாழ்க்கையிலேயே இனி ஆவிக்குரியபிரகாரமாக மரித்தவர்களாக அல்ல, நம்முடைய ஆவியில் உயிருள்ளவர்களாக இருப்போம் என்பதையும் அவர் வாக்குக்கொடுக்கிறார். இந்த நித்திய ஜீவனைப் பெற்று, நம்முடைய ஆவியில் மறுபடியும் பிறக்க ஒரு மனிதன் என்ன செய்யவேண்டும்?
மனந்திரும்பி விசுவாசியுங்கள்
“காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது;
மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள்”
மாற்கு 1:15
அதுமுதல் இயேசு:
“மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் அருகில் இருக்கிறது”
என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
மத்தேயு 4:17
மனந்திரும்புதல் என்பது பாவத்தைக் குறித்தும் தன்னைக் குறித்தும் தன் மனதை மாற்றிக்கொள்வது – பாவத்தைவிட்டு விலகி, தேவனிடம் திரும்புவது.
“…இப்பொழுது மனம் மாறவேண்டும் என்று எல்லா மனிதர்களுக்கும் கட்டளையிடுகிறார்.”
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:30
இந்த அழைப்பு எல்லா இடங்களிலும் உள்ள ஒவ்வொருவருக்கும், விதிவிலக்கு இல்லாமல், கொடுக்கப்படுகிறது.
அவரை விசுவாசியுங்கள்
“அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: தேவனுக்குரிய செயல்களை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அவர் அனுப்பினவரை நீங்கள்
விசுவாசிப்பதே தேவனுக்குரிய செயல்களாக இருக்கிறது என்றார்.”
யோவான் 6:28-29
தேவனைத் திருப்திப்படுத்த தாங்கள் என்ன செய்யவேண்டும் என்று இந்த மனிதர்கள் இயேசுவிடம் கேட்டபோது, பதில் மிகவும் தெளிவாக இருந்தது… அவரை விசுவாசியுங்கள்!
பின்வரும் வேதப்பகுதிகளைக் கவனியுங்கள்:
“…விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல்
நித்தியஜீவனை பெறும்படிக்கு…”
யோவான் 3:16
“அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்;
விசுவாசிக்காதவனோ… அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான்.”
யோவான் 3:18
“என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு
நித்தியஜீவன் உண்டு என்று
உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
யோவான் 6:47
“…ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்னசெய்யவேண்டும் என்றான்.
அதற்கு அவர்கள்:
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி,
அப்பொழுது நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள்…”
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:30-31
“நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின்
நாமத்தின்மேல் விசுவாசமாக இருந்து…
அவருடைய கட்டளையாக இருக்கிறது.”
1 யோவான் 3:23
என் வசனத்தைக் கேட்டு, அவரை விசுவாசியுங்கள்
“என் வசனத்தைக்கேட்டு,
என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு
நித்தியஜீவன் உண்டு;
அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல்,
மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான்
என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
யோவான் 5:24
இந்த வசனத்தை மறுபடியும் பாருங்கள்: வாக்குத்தத்தங்களைப் பெறுவதற்குச் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு நிபந்தனைகளைக் கவனியுங்கள்: “என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு…”. தேவன் நித்தியஜீவனையும் தண்டனைத் தீர்ப்பிலிருந்து விடுதலையையும் வாக்குக்கொடுத்திருக்கிறார்; ஆனால் இந்த வாக்குத்தத்தம் கேட்டு விசுவாசிக்கிறவர்களுக்கு மட்டுமே உரியது.
அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுங்கள்
“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாக
அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ,
அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி,
அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
அவர்கள், இரத்தத்தினாலாவது சரீரவிருப்பத்தினாலாவது
கணவனுடைய விருப்பத்தினாலாவது பிறக்காமல்,
தேவனாலே பிறந்தவர்கள்.”
யோவான் 1:12-13
“தேவனாலே பிறந்தவர்களாக” ஆவதற்கு இந்த மனிதர்கள் என்ன செய்தார்கள்? இந்த வேதப்பகுதியின்படி, அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் வைத்து, அவரை ஏற்றுக்கொண்டார்கள். இன்று அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் வைத்து அவரை ஏற்றுக்கொள்கிற எவரும் அப்படியே தேவனாலே பிறக்கிறார்கள்.
விசுவாசிக்கிற எல்லோரும் நீதிமான்களாக்கப்படுகிறார்கள்
“எல்லோருக்கும் கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு…
அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.
மூன்றாம்நாளிலே தேவன் அவரை உயிரோடு எழுப்பி…
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவான் என்று
தீர்க்கதரிசிகள் எல்லோரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள்…”
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:36,39,40,43
“…இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்…
அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள்…
தேவனோ அவரை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பினார்…
இயேசுகிறிஸ்து மூலமாக உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,
மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளில் இருந்து விடுதலையாகி நீதிமான்களாக்கப்பட முடியாமலிருந்ததோ,
விசுவாசிக்கிற எவனும் அவைகளிலிருந்து இயேசுவாலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான்…”
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:23,28,30,38-39
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10-இல் பேதுருவும், அப்போஸ்தலருடைய நடபடிகள் 13-இல் பவுலும், கர்த்தராக இருக்கிற இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு “பாவமன்னிப்பு” கிடைக்கும் என்று பிரசங்கித்தார்கள்.
இருதயத்திலே விசுவாசியுங்கள்
“…கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு,
தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார் என்று
உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
இருதயத்திலே விசுவாசிக்கிறதினால்
நீதி உண்டாகும்…”
ரோமர் 10:9-10
இந்த வேதப்பகுதியின்படி, இருதயத்திலே விசுவாசிக்கிற எல்லோரும் தேவனுக்கு முன்பாக நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.
“எல்லோருக்கும் கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு…
அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.
மூன்றாம்நாளிலே தேவன் அவரை உயிரோடு எழுப்பி…
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவான்…
…இயேசுகிறிஸ்து மூலமாக உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்…”
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:36,39,40,43; 13:23,28,30,38-39
“…நாங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருந்து,
தேவனோடு ஒப்புரவாகுங்கள்
என்று கிறிஸ்துவினால் உங்களை வேண்டிக்கொள்கிறோம்.”
2 கொரிந்தியர் 5:20
“ஆவியானவரும் மணமகளும் வா என்கிறார்கள்;
கேட்கிறவனும் வா என்பானாக;
தாகமாக இருக்கிறவன் வரவேண்டும்;
விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளவேண்டும்.”
வெளிப்படுத்தின விசேஷம் 22:17
இப்பொழுது என்ன?
நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்திருந்தால், அழிவில்லாத வித்தாகிய தேவனுடைய வசனத்தினாலே மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள்; புதிதாகப் பிறந்த குழந்தையைப்போல, அந்த வசனத்தினாலே வளரும்படி, அதின் கலப்பில்லாத பாலின்மேல் வாஞ்சையாக இருக்கவேண்டும். அந்த வித்து உங்களுக்குள் என்ன செய்கிறது என்பது வேறோர் இடத்தில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது (இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை). பின்பு, அதை எப்படி உட்கொள்வது என்பதை அறிய வசனத்தின் முக்கியத்துவம், வசனத்தை உட்கொள்ளுதல் ஆகியவற்றைப் பாருங்கள். அடிப்படை உபதேசங்களைக் கற்க நீங்கள் ஆயத்தமாகும்போது, அவைகளைப் பற்றிய கூடுதல் பாடங்களும் உள்ளன (இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை).