மத்தேயு 4-இல் இயேசு மூன்றுமுறை பிசாசினால் சோதிக்கப்பட்டார்; ஒவ்வொரு முறையும் அவர் வேதவசனத்தைக் கொண்டே பதிலளித்து, “…என்று எழுதியிருக்கிறதே” என்றார். முடிவில் (வசனம் 11) பிசாசு அவரைவிட்டு விலகிப்போனான். அவருடைய வார்த்தைகளை மனப்பாடம் செய்து நம்முடைய இருதயத்தில் வைத்திருந்தால், நாமும் இப்படிச் செய்யமுடியும். யோவான் 14:26 சொல்லுகிறது: “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவுபடுத்துவார்.”
“அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் உபவாசமாக இருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டானது. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: “நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கற்கள் அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான். அவர் மறுமொழியாக: “மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார். அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி: “நீர் தேவனுடைய குமாரனென்றால் கீழே குதியும்; ஏனென்றால், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்று எழுதியிருக்கிறதே” என்றான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவைச் சோதித்துப்பார்க்காமல் இருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என்றார். மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: “நீர் சாஷ்டாங்கமாக விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று சொன்னான்; அப்பொழுது இயேசு: “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார். அப்பொழுது பிசாசு அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்கு பணிவிடை செய்தார்கள்.”
மத்தேயு 4:1-11
தேவனுடைய சர்வாயுதங்களையும் அணிந்துகொள்ளும்படி நமக்குக் கட்டளையிடப்பட்டிருக்கிறது; நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்கான ஆயத்தத்தைக் கால்களில் அணிந்துகொள்வதும் அதில் அடங்கும். எபேசியர் 6:15 சொல்லுகிறது: “சமாதானத்தின் நற்செய்திக்குரிய ஆயத்தம் என்னும் காலணிகளைக் கால்களிலே தொடுத்தவர்களாகவும்;” மனப்பாடம் செய்வது, நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள ஆயத்தமாக இருப்பதற்கான ஒரு வழி.
நீதிமொழிகள் 22:20-21 சொல்லுகிறது: “சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை பதிலாக சொல்லும்படிக்கும், ஆலோசனையையும், ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா?”
எரேமியாவின் வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தில், தேவனுடைய வார்த்தை அவனுக்கு அனுதினமும் “நிந்தையும், பரியாசமுமானது” (எரேமியா 20:8). ஆகவே எரேமியா தவறான மனநிலையில் இருந்து, இனி தேவனுக்காகப் பேசுவதில்லை என்று தீர்மானித்தான். ஆனாலும் தேவனுடைய வார்த்தை அவனுக்குள் எரிந்துகொண்டிருந்ததால், அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை.