பரிசுத்த ஆவியானவர்
பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குப் போதித்து உங்களை நடத்துவார்
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது,
ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டியதில்லை;
அந்த அபிஷேகம் எல்லாவற்றையும்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது;
அது சத்தியமாக இருக்கிறது, பொய்யல்ல,
அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
1 யோவான் 2:27
விசுவாசிகள் தங்களுடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தில் வளருவதற்குத் தேவையான எல்லாமே தங்களிடம் இருக்கிறது என்றும், அதற்காக அவர்கள் வேதாகமக் கல்லூரிக்குச் செல்லவோ, முனைவர் பட்டம் பெற்ற ஒரு மனிதனிடம் கற்றுக்கொள்ளவோ வேண்டியதில்லை என்றும் அவர்களை உற்சாகப்படுத்துவதே இந்த இணையதளத்தின் முழு நோக்கம். தேவன் ஆண்களையும் பெண்களையும் போதகர்களாகப் பயன்படுத்துவதில்லை, அவர்களுக்கு வரங்களைக் கொடுப்பதில்லை என்பது இதன் அர்த்தமல்ல; தேவனுடைய காரியங்களைக் கற்றுக்கொள்ள மனிதர்களைச் சார்ந்திருப்பதைவிட, தேவனுடைய ஆவியானவரால் போதிக்கப்படும் தேவனுடைய வசனத்தையே நாம் முதன்மையாகச் சார்ந்திருக்கவேண்டும் என்பதே இதன் அர்த்தம். ஆகவே தேவன் நமக்குப் போதிக்கும்படி தேவனுடைய ஆவியானவரையும், நம்முடைய பாடப்புத்தகமாகத் தேவனுடைய வசனத்தையும் நமக்குக் கொடுத்திருக்கிறார்.
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியானவராலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழமான காரியங்களையும் ஆராய்ந்திருக்கிறார். மனிதனிலுள்ள ஆவியேதவிர மனிதர்களில் எவன் மனிதனுக்குரியவைகளை அறிவான்? அதைப்போல, தேவ ஆவியானவரைத்தவிர, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியானவரையே பெற்றோம்.
1 கொரிந்தியர் 2:10-12
ஆவியானவரால் மட்டுமே நாம் தேவனுக்குரியவைகளைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதை இந்தப் பகுதியில் பார்க்கிறோம். மேலும், பவுல் 2 கொரிந்தியரில் இப்படி எழுதுகிறார்:
எங்களால் ஏதாவது ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் இல்லை; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக இருப்பதற்கு, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாக இல்லாமல், ஆவியானவருக்குரியதாக இருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆனால், ஆவியோ உயிர் கொடுக்கிறது.
2 கொரிந்தியர் 3:5-6
ஆகவே, வேதவசனங்களை ஒரு கல்விப் பயிற்சியாகப் படிப்பது நம்முடைய நோக்கமல்ல; தேவனுக்குரியவைகளை ஆவியானவரால் கற்றுக்கொள்ள நாடுவதே நம்முடைய நோக்கம். அறிவைச் சேர்த்துவைப்பதை அல்ல, அவருடைய சாயலுக்கு ஒப்பாக மாற நமக்கு உதவும் காரியங்களைக் கண்டடைவதையே நாம் நாடுகிறோம்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், அவர் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை என்னவென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற உரிமைப்பங்கினுடைய மகிமையின் ஐசுவரியம் என்னவென்றும்; தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடம் காண்பிக்கும் அவருடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் என்னவென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
எபேசியர் 1:17-19
யோவான் 14 முதல் 16 வரையுள்ள அதிகாரங்கள் பரிசுத்த ஆவியானவரைக் குறித்த போதனைகளைத் தருகின்றன. அந்த அதிகாரங்களில் உள்ள இரண்டு குறிப்பிட்ட வசனங்கள், போதகராகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்துப் பேசுகின்றன:
என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற
பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளன்
எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து,
நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும்
உங்களுக்கு நினைவுபடுத்துவார்.
யோவான் 14:26
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது,
எல்லா சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;
அவர் தம்முடைய சொந்தமாக பேசாமல்,
தாம் கேள்விப்பட்டவைகள் எல்லாவற்றையும் சொல்லி,
வரப்போகிற காரியங்களை உங்களுக்குத் தெரிவிப்பார்.
யோவான் 16:13
ஆகவே, கற்றுக்கொள்ளவும் வளரவும் நாம் விரும்பும்போது, வேதாகமத்தைப் பற்றிய மற்ற மனிதர்களுடைய விளக்கங்களில் நம்பிக்கை வைக்காமல், முதலாவது தேவனுடைய பாடப்புத்தகத்தைப் பார்த்து, நம்முடைய போதகராகிய அவரோடு உரையாடவும் ஐக்கியம் கொள்ளவும் நேரம் செலவிடுவோமாக. வேதவசனங்களின் மூலம் நம்முடைய எல்லாக் கேள்விகளுக்கும் அவரால் பதிலளிக்க முடியும். அவர் சொல்லுகிறார்:
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்;
தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்;
தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;
ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்;
மத்தேயு 7:7-8a
பரிசுத்த ஆவியானவர் செய்கிறவைகள்
அவர் நம்மைத் தேற்றுகிறார்
நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன், உங்களிடம் வருவேன்.
யோவான் 14:18
அவர் நமக்குப் பெலன் தருகிறார்
பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து,
எருசலேமிலும், யூதேயா முழுவதிலும்,
சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும்,
எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8
சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு
மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும்,
கொலோசெயர் 1:11
அவர் உலகத்தைக் கண்டித்து உணர்த்துகிறார்
அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும்,
உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
யோவான் 16:8
அவர் எப்பொழுதும் நம்மோடு இருக்கிறார்
நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை
எபிரெயர் 13:5c
நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது
என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி
சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார்.
யோவான் 14:16
“வேண்டாம்” என்று சொல்ல அவர் நமக்கு உதவுகிறார்
ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது வெளிப்பட்டது.
நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து,
தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து,
தீத்து 2:11-12
அவர் ஆவிக்குரிய ஜீவனைத் தருகிறார்
மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும்,
ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும்.
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவருடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால்,
கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவர்
உங்களுக்குள் வாழ்கிற தம்முடைய ஆவியானவராலே
மரணத்திற்குரிய உங்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
ரோமர் 8:10-11
அவர் விசுவாசிகளை முத்திரையிடுகிறார்
நீங்களும் உங்களுடைய இரட்சிப்பின் நற்செய்தியாகிய சத்திய வசனத்தைக்கேட்டு,
விசுவாசிகளானபோது,
வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு
ஆவியானவர் நம்முடைய உரிமைப்பங்கின் உத்திரவாதமாக இருக்கிறார்.
எபேசியர் 1:13-14
அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்காக முத்திரையாகப் பெற்ற
தேவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாமல் இருங்கள்.
எபேசியர் 4:30
உங்களிடம் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாரா?
தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால்,
நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல்
ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள்.
கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை.
ரோமர் 8:9
உங்களிடம் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாரா? இல்லையென்றால், நீங்கள் தேவனுடைய பிள்ளை அல்ல. ஆவியானவர்
உங்களிடம் இருந்தால், அது உங்களுக்கு எப்படித் தெரியும்? அது ஒரு உணர்வா? அல்லது தேவனுடைய வசனத்தின்
மூலம் அதை அறிகிறீர்களா? தேவனுடைய வசனம் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்:
நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கும் விசுவாசத்தினால்
தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்களே.…
மேலும் நீங்கள் பிள்ளைகளாக இருக்கிறதினால்,
அப்பா, பிதாவே! என்று கூப்பிடுவதற்காக
தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்களுடைய இருதயங்களில் அனுப்பினார்.
கலாத்தியர் 3:26; 4:6
பண்டிகையின் கடைசிநாளாகிய முக்கியமான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு:
ஒருவன் தாகமாக இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணட்டும்.
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ,
அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
தம்மை விசுவாசிக்கிறவர்கள் பெற்றுக்கொள்ளப்போகிற ஆவியானவரைக்குறித்து இப்படிச் சொன்னார்.
இயேசு இன்னும் மகிமைப்படாமல் இருந்ததினால் பரிசுத்த ஆவியானவர் இன்னும் கொடுக்கப்படவில்லை.
யோவான் 7:37-39
நமக்குள் இருக்கிற நம்பிக்கையைக் குறித்து நம்மிடம் விசாரித்துக் கேட்கிற எல்லோருக்கும் பதில்சொல்ல நாம்
எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கவேண்டும் (1 பேதுரு 3:15). உங்களிடம் பரிசுத்த ஆவியானவர் ஏன் இருக்கிறார் என்பதற்குக்
காரணம் சொல்ல நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா?
வீட்டுப்பாடம்
- வாசியுங்கள்: யோவான் 14-16
- மனப்பாடம் செய்யுங்கள்: 1 யோவான் 2:27, யோவான் 14:26, 1 கொரிந்தியர் 2:12, கலாத்தியர் 3:26, கலாத்தியர் 4:6, யோவான் 7:38
இதைப் பற்றி மேலும் அறிய வீடியோ போதனையைப் பாருங்கள் (ஆங்கிலத்தில்): The Holy Spirit Our Teacher