நீங்கள் விசுவாசமுள்ளவர்களோ என்று உங்களை நீங்களே சோதித்தறியுங்கள்
பின்வரும் கடிதம், ஒழுங்காகச் சபைக்குச் செல்லும் ஒருவருக்கு எழுதப்பட்டது. சாத்தானின் மிகப்பெரிய
வஞ்சகங்களில் ஒன்றில் அவர் விழுந்திருக்கக்கூடும் என்பதே கவலை: சபைக்குச் சென்று, சரியான வார்த்தைகளைச்
சொல்லி, சரியான எல்லாப் பாரம்பரியங்களையும் பின்பற்றி, தான் ஒரு கிறிஸ்தவன் என்று உண்மையாகவே நம்பி –
வாழ்க்கையின் முடிவில், தான் உண்மையில் இரட்சிக்கப்படவில்லை என்று கண்டுகொள்வது.
சபையில் உங்கள் அருகில் உட்கார்ந்திருப்பவர் இப்படிப்பட்டவராக இருக்கலாம். இந்தச் சத்தியத்தைப்
பகிர்ந்துகொள்வதன் மூலம் அவருக்கு உதவுங்கள்; ஏனென்றால் கிறிஸ்து ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை நம்மிடம்
ஒப்புவித்திருக்கிறார்.
“இவைகளெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது;
அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மை அவரோடு ஒப்புரவாக்கி,
ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
அது என்னவென்றால், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல்,
கிறிஸ்துவிற்குள் அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கி,
ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடம் ஒப்புவித்தார்.”
2 கொரிந்தியர் 5:18,19
அன்பான நண்பரே,
கடந்த வாரம் நாம் ஒன்றாகச் செலவிட்ட நேரத்தை நான் மிகவும் அனுபவித்தேன். நாம் பேசிக்கொண்டவைகளைக்
குறித்து நீங்கள் தொடர்ந்து சிந்திக்கும்படி ஜெபிக்கிறேன்.
“நான் விசுவாசிக்கிறேன்” என்ற சொல்லை நீங்கள் பயன்படுத்தும் விதம் என்னை மிகவும் கவலைப்படுத்துகிறது.
“விசுவாசித்தல்” என்ற இந்தச் சொல்லைப் பயன்படுத்தி, தேவனுக்கு முன்பாகத் தங்களுடைய உண்மையான நிலையைக் குறித்து
மனிதர்களைச் சாத்தான் வஞ்சிக்கமுடியும். தயவுசெய்து பின்வரும் வசனங்களை ஜெபத்தோடு சிந்தித்து, “கர்த்தாவே,
உமக்கு முன்பாக நான் எங்கே நிற்கிறேன்?” என்று தேவனிடம் உண்மையாகக் கேளுங்கள்.
“விசுவாசித்தல்” பற்றித் தேவனுடைய வசனம் என்ன சொல்லுகிறது என்பதைக் கவனியுங்கள்:
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை
விசுவாசிக்கிறவன் எவனோ
அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு,
அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார்.”
யோவான் 3:16
“தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்;
பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.”
யாக்கோபு 2:19
“அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே!
உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா?
உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா?
உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை;
அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”
மத்தேயு 7:22-23
இந்த மனிதர்கள் நிச்சயமாகத் தேவனை விசுவாசித்தார்கள்; ஆனாலும் அவர்கள் நித்தியத்தைத் தேவனைவிட்டுப்
பிரிந்து கழிக்கிறார்கள். “விசுவாசித்தல்”, “கிறிஸ்தவனாக இருத்தல்” என்பதன் உண்மையான அர்த்தத்தைக்
குறித்துச் சாத்தான் பலரை வஞ்சித்துக் குழப்பியிருக்கிறான்.
“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே
பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்,
என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.”
மத்தேயு 7:21
“நான் ஒரு கிறிஸ்தவன்” என்று சொல்லுகிற எல்லோரும் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை.
“நான் தேவனை விசுவாசிக்கிறேன்” என்று சொல்லுகிற எல்லோரும் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை.
“நீங்கள் விசுவாசம் உள்ளவர்களோ என்று உங்களை நீங்களே சோதித்துப்பாருங்கள்;
உங்களை நீங்களே பரீட்சை செய்துபாருங்கள்.
இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா?
நீங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்களாக இருந்தால் தெரியாது.”
2 கொரிந்தியர் 13:5
தேவன் தம்முடைய வசனத்தின் மூலம் உண்மையான விசுவாசத்தின் அடையாளங்களை நமக்குக் கொடுத்திருக்கிறார்.
தேவனுடைய வசனத்தை முழுமையாக வைத்து, நாம் உண்மையான விசுவாசிகளா அல்லது வஞ்சிக்கப்படுகிறோமா என்று நம்முடைய
விசுவாசத்தைச் சோதித்துப்பார்க்கலாம்.
(இயேசு கிறிஸ்துவில் உண்மையான இரட்சிப்பின் சில அடையாளங்களைப் பின்வரும் வசனங்கள் விளக்குகின்றன.)
1. ஒவ்வொரு உண்மையான விசுவாசியின் வாழ்க்கையிலும் ஒரு புதிய தொடக்கத்தின் நேரம் உண்டு; உங்கள் வாழ்க்கை
மாற்றப்படும் ஒரு நேரம். வேதாகமம் அதை மறுபடியும் பிறத்தல் என்று அழைக்கிறது.
“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவிற்குள் இருந்தால்
புதுப்படைப்பாக இருக்கிறான்;
பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோனது,
எல்லாம் புதிதானது.”
2 கொரிந்தியர் 5:17
“இயேசு அவனுக்கு மறுமொழியாக:
ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால்
தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று
உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.”
யோவான் 3:3
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மாற்றப்பட்ட ஒரு நேரம் உண்டா?
2. நாம் கிறிஸ்துவிடம் வரும்போது பாவமில்லாதவர்களாக இருப்போம் என்று வேதாகமம் போதிக்கவில்லை. ஆனால்
அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற விருப்பம் நமக்கு இருக்கும். அவருடைய சித்தத்தைச் செய்து
அவரைப் பிரியப்படுத்தவேண்டும் என்ற விருப்பம் நமக்கு இருக்கும்.
“அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடிக்கிறவர்களாக இருப்போமானால்,
அவரை அறிந்திருக்கிறோம் என்பதை அதினால் அறிவோம்.
அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும்,
அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவன்
பொய்யனாக இருக்கிறான், அவனுக்குள் சத்தியம் இல்லை.
அவருடைய வசனத்தைக் கடைபிடிக்கிறவனிடத்தில்
தேவ அன்பு உண்மையாகவே பூரணப்பட்டிருக்கும்;
நாம் அவருக்குள் இருக்கிறோம் என்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.”
1 யோவான் 2:3-5
அவருக்குக் கீழ்ப்படியவேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருக்கிறதா?
3. தேவனுடைய உண்மையான பிள்ளைகள் எல்லோரும் தேவனால் கண்டிக்கப்படுகிறார்கள்.
“…கர்த்தர் எவனை நேசிக்கிறாரோ அவனை அவர் கண்டித்து,
தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்…
நீங்கள் கண்டிக்கப்படுவதை சகிக்கிறவர்களாக இருந்தால்
தேவன் உங்களைப் பிள்ளைகளாக எண்ணி நடத்துகிறார்;
தகப்பன் கண்டிக்காத பிள்ளைகள் உண்டோ?
எல்லோருக்கும் கிடைக்கும் கண்டிப்பு உங்களுக்குக் கிடைக்காமல் இருந்தால்
நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இல்லாமல் வேசியின் பிள்ளைகளாக இருப்பீர்களே.”
எபிரெயர் 12:6-8
ஒரு குறிப்பிட்ட பாவத்திற்காகத் தேவன் உங்களைக் கண்டித்த ஒரு நேரம்
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
4. இந்த வாழ்க்கையில் உதவும்படி, ஒவ்வொரு உண்மையான விசுவாசிக்கும் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுகிறார். ஆனால்
அவனுக்கு இந்த உலகத்திற்குரிய சரீர இச்சையும் இருக்கிறது. ஆகவே ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் இவ்விரண்டிற்கும் இடையே
ஒரு போராட்டம் இருக்கிறது. உலகத்தைப்போல வாழ்வதா, அல்லது நாம் தேவனுடைய வசனத்தின்படி வாழ்ந்து அவருடைய
சித்தத்திற்குக் கீழ்ப்படியவேண்டும் என்ற ஆவியானவரின் விருப்பத்தைப் பின்பற்றுவதா என்று தெரிந்தெடுக்க நாம்
சோதிக்கப்படுகிறோம்.
“பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால்,
ஆவியானவருக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள்,
அப்பொழுது சரீர இச்சையை நிறைவேற்றாமல் இருப்பீர்கள்.
சரீர இச்சை ஆவியானவருக்கு எதிராக செயல்படுகிறது.
ஆவியானவர் சரீர இச்சைக்கு எதிராக செயல்படுகிறார்;
நீங்கள் செய்யவேண்டியவைகளைச் செய்யாதபடி,
இவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கிறது.”
கலாத்தியர் 5:16-17
இந்தப் போராட்டம் உங்களுக்குள் இருக்கிறதா?
5. எந்த உண்மையான விசுவாசியும் பாவத்தை வழக்கமாகச் செய்துகொண்டிருப்பதில்லை. இதைப் பாவம் செய்வதோடு
குழப்பிக்கொள்ளக்கூடாது. பாவம் என்பது தேவனுடைய சித்தத்திற்கு முரணான ஒரு செயல். விசுவாசிகளாகிய நாம்,
உணராமலேயே பலமுறை பாவம் செய்கிறோம். ஆனால் பாவத்தை
வழக்கமாகச் செய்துகொண்டிருப்பது வேறு.
தேவனுடைய சித்தத்தை அறிந்தும், மாறவேண்டும் என்ற நோக்கமோ முயற்சியோ இல்லாமல், அதற்கு எதிராக வேண்டுமென்றே
தொடர்ந்து செயல்படுவதே அதன் அர்த்தம்.
“தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான்,
ஏனென்றால், அவருடைய வித்து அவனுக்குள் நிலைத்திருக்கிறது;
அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவம் செய்யமாட்டான்.”
1 யோவான் 3:9
“நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால்,
நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம்,
சத்தியம் நமக்குள் இருக்காது.”
1 யோவான் 1:8
நீங்கள் பாவத்தை வழக்கமாகச் செய்துகொண்டிருக்கிறீர்களா?
சுருக்கமாக, நாம் நம்மிடம் நேர்மையாக இருக்கவேண்டும். நம்முடைய சொந்த இருதயத்தை உண்மையாகவே
பார்த்து, நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளவேண்டும்:
- நான் புதுப்படைப்பான ஒரு நேரம் என் வாழ்க்கையில் உண்டா?
- தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய சித்தத்தைச் செய்யவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கிறதா?
- ஒரு குறிப்பிட்ட பாவத்திற்காகத் தேவன் என்னைக் கண்டித்த ஒரு நேரம் என் வாழ்க்கையில் எனக்கு
நினைவிருக்கிறதா?
- தேவனுடைய வசனத்திற்குக் கீழ்ப்படியும்படி நான் என் சரீர இச்சையோடு போராடுகிறேனா?
- நான் பாவத்தை வழக்கமாகச் செய்துகொண்டிருக்கிறேனா?
விரைவில் உங்களை மறுபடியும் சந்திப்பேன் என்று நம்புகிறேன்.
உங்கள் நண்பன்,
ஒரு கிறிஸ்தவன்
தொடர்புடைய கட்டுரைகள்
← தலைப்பு ஆய்வுகள் பக்கத்திற்குத் திரும்பு