பிரிந்துபோகட்டும்

ஆனாலும், விசுவாசம் இல்லாதவர் பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும்,
இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்கள் இல்லை.
சமாதானமாக இருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
1 கொரிந்தியர் 7:15

இந்தக் கட்டுரைக்கு “உதவுங்கள்! என் கணவன் (அல்லது என் மனைவி) என்னைவிட்டுப் பிரிந்துபோகிறார்” என்று பெயரிட நினைத்தேன்; ஆனால் “பிரிந்துபோகட்டும்” என்ற தலைப்பு, நான் பகிர்ந்துகொள்ள விரும்பும் வேதாகமக் கொள்கைகளின்மேல் அதிகக் கவனத்தைத் திருப்பும் என்று எண்ணினேன்.

என் வாழ்க்கைத்துணை விவாகரத்து செய்யத் தீர்மானித்தபோது, நான் என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்துத் தெளிவான சில வேதாகமக் கொள்கைகள் என்னிடம் இருந்திருக்கவேண்டும் என்று விரும்பினேன். நிச்சயமாக, என் கிறிஸ்தவ வாழ்க்கையின் அந்தக் கட்டத்தில் நான் செய்யத் தெரிந்த ஒரே காரியம், உதவிக்காகத் தேவனை நோக்கிக் கதறுவதுதான். ஆனால் விவாகரத்தைப் பற்றிய புத்தகங்களை வாசிப்பதிலும் நிறைய நேரம் செலவிட்டேன். ஒவ்வொரு புத்தகமும் வெவ்வேறு ஆலோசனை சொல்வதாகத் தோன்றியது; பெரும்பாலான புத்தகங்கள் அதிக உதவியாக இருக்கவில்லை. விவாகரத்தின் செயல்முறையின்போது நான் கற்றுக்கொண்ட சில எளிய வேதாகம ஆலோசனைகளை இந்தக் கட்டுரையில் பகிர்ந்துகொள்ள நம்புகிறேன். சுருக்கமாகச் சொன்னால்: நான் மறுபடியும் ஒரு விவாகரத்தைக் கடந்துபோகவேண்டியிருந்தால், நான் செய்யும் காரியங்கள் இவைகளே. இந்தத் தளத்திலுள்ள எல்லாக் கட்டுரைகளையும்போலவே, “நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்” (2 தீமோத்தேயு 2:7) என்பதையே ஜெபிக்கிறேன்.

கொள்கை #1: “விசுவாசம் இல்லாதவர் பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும்…”

உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் திருமணத்தைவிட்டு விலக விரும்பினால், அப்போஸ்தலனாகிய பவுல் “பிரிந்துபோகட்டும்” என்று சொல்லுகிறார். அதாவது, நாம் அதை எதிர்த்துப் போராடக்கூடாது; நாம் “சமாதானத்திற்குரியவைகளையும்… நாடுவோம்” (ரோமர் 14:19), “எல்லோரோடும் சமாதானமாக இருக்கவும்… விரும்புங்கள்” (எபிரெயர் 12:14). ஆகவே என் விஷயத்தில், “நீ போக விரும்பினால், தயவுசெய்து போ” என்று சொல்லக்கூடிய நிலைக்கு நான் வரவேண்டியிருந்தது. ஒரு உறவை ஒருவர் மட்டும் தனியாக ஒருபோதும் கட்டிக்காக்கமுடியாது; அப்படி முயற்சிப்பது வீண். இயேசு தம்மை நம்பும்படி நம்மைக் கட்டாயப்படுத்தாததுபோலவே, அன்பும் தன்னார்வமானது. நான் அவருக்கு விரோதமாக நடந்தபோதும் அவர் என்னைத் தொடர்ந்து ஆசீர்வதித்தார். தயவுசெய்து கவனியுங்கள்: அன்பு “எல்லாவற்றையும் தாங்கும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் சகிக்கும்” (1 கொரிந்தியர் 13:7). உங்கள் வாழ்க்கைத்துணையை எந்த நிபந்தனையுமின்றிக் கர்த்தரிடம் ஒப்புக்கொடுக்கவேண்டும்; அவரை/அவளைப் பலிபீடத்தின்மேல் வையுங்கள். வேதம் சொல்லுகிறது: “அவர் உங்களை விசாரிக்கிறவராக இருப்பதினால், உங்களுடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” 1 பேதுரு 5:7.

கொள்கை #2: “உன் மேலாடையையும் கொடுத்துவிடு”

இது எனக்கு மிகவும் கடினமான ஒரு கொள்கையாக இருந்தது. என் வாழ்க்கைத்துணை விட்டுப்போவதால், எங்கள் உடைமைகளில் குறைந்தது பாதியாவது எனக்குக் கிடைப்பதுதான் நியாயம் என்று நினைத்தேன்… ஏற்கனவே நான் நஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன், கொஞ்சமாவது ஆறுதல் இருக்கவேண்டாமா? ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது?

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்;
தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்;
ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால்,
அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு.
உன்னோடு வழக்காடி உன் ஆடையை எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவனுக்கு
உன் மேலாடையையும் கொடுத்துவிடு.
மத்தேயு 5:39-40

ஆகவே, நியாயமான ஒரு பங்கீட்டுக்காக என் வாழ்க்கைத்துணையோடு போராடியபின், அதற்குப் பதிலாக எல்லாவற்றையும் அவளுக்கே கொடுத்துவிடத் தீர்மானித்தேன். “தீமையை நன்மையினாலே வெல்லு” (ரோமர் 12:21) என்பதே நம்முடைய இலக்காக எப்பொழுதும் இருக்கவேண்டும்; “நீ இப்படிச் செய்வதினால் நெருப்புத் தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்” (ரோமர் 12:20). ஓ, அது எவ்வளவு நன்றாக இருந்தது… வெறுமனே விட்டுவிடுவது. இது உங்களுக்கும் இயேசுவுக்கும் இடையிலான ஒரு புதிய வாழ்க்கையின் நேரம். அந்த உடைமைகளில் எதுவும் எப்படியும் உங்களை மகிழ்ச்சியாக்கப்போவதில்லை; அவைகள் கசப்பான நினைவுகளையே திரும்பக் கொண்டுவரும்.

கொள்கை #3: “சகோதரர்கள்மேல் வழக்குத் தொடராதீர்கள்”

உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடு வழக்குண்டானால்,
வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடம் போகாமல்,
அநியாயக்காரர்களிடம் போகத் துணிகிறதென்ன?
1 கொரிந்தியர் 6:1

இந்தக் கருத்தில் பலர் என்னோடு உடன்படமாட்டார்கள் என்று நிச்சயமாக அறிவேன்; ஆனால் இது நான் கொடுக்கும் கட்டளை அல்ல, கர்த்தருடைய கட்டளை (1 கொரிந்தியர் 14:37). உங்கள் வாழ்க்கைத்துணை ஒரு விசுவாசியானால், இந்தக் காரியங்கள் சபைக்கு வெளியே உள்ள வழக்கறிஞர்களால் அல்ல, சபையின் மூப்பர்களால் கையாளப்படவேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணை விரும்புவதை அவருக்கு/அவளுக்குக் கொடுத்து, அவரை/அவளைப் போகவிடுவது உங்களைப் பல பிரச்சனைகளிலிருந்து காக்கும். என் விஷயத்தில், இந்தக் காரியத்தைக் குறித்து ஒரு மூப்பர் எனக்கு ஆலோசனை சொன்னபோது, நான் ஏற்கனவே ஒரு வழக்கறிஞரோடு தொடங்கியிருந்தேன். அப்பொழுது, நான் விவாகரத்துக்குச் சம்மதிக்கமாட்டேன் என்று என் வழக்கறிஞரிடம் சொல்லி, ஒரு மூப்பர் என் மனைவியோடு பேசும்படி ஏற்பாடு செய்தேன். வேதம் “பிரிந்துபோகட்டும்” என்று சொல்லுகிறது உண்மைதான்; ஆனால் “தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும்” (மத்தேயு 19:6) என்றும் சொல்லுகிறது. நடைமுறையில், சமாதானத்தைக் காத்துக்கொள்ளும்படி நாம் அவர்களைப் போகவிடவேண்டும் என்பதே இதன் அர்த்தம்; ஆனால் நாம் விருப்பத்தோடு ஒரு விவாகரத்துக்குச் சம்மதிக்கவேண்டும் என்று என்னால் நம்பமுடியவில்லை. அவர்கள் விவாகரத்து விரும்பினால், நாட்டின் சட்டப்படி அதைப் பெறலாம்; ஆனால் என் ஆசீர்வாதத்தோடு அல்ல. நான் விவாகரத்தை எதிர்த்தேன் என்றும், அதற்குச் சம்மதிக்கமாட்டேன் என்றும் விவாகரத்து நடவடிக்கைகளில் வெளிப்படையாகப் பதிவுசெய்யும்படி செய்தேன். இதன் அர்த்தம், என் வாழ்க்கைத்துணை யாருடைய குற்றமும் இல்லாத (no-fault) விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம்; அது எனக்கு எந்தச் சட்டப்பூர்வமான வழியையும் விட்டுவைக்கவில்லை. ஆனாலும் “நாம் காண்பவைகளின்படி நடக்காமல், அவரை விசுவாசித்து நடக்கிறோம்” (2 கொரிந்தியர் 5:6). அதாவது, நம்முடைய சூழ்நிலைகளின் அடிப்படையில் சிறந்த செயல் என்று நாம் நினைப்பதை வைத்து அல்ல, தேவன் தம்முடைய வசனத்தின் மூலம் நம்மிடம் விரும்புவதை வைத்தே நம்முடைய தீர்மானங்களை எடுக்கவேண்டும்.

கொள்கை #4: “எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்”

எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்;
அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள்
உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
1 தெசலோனிக்கேயர் 5:18
ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய
ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக
எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம்.
எபிரெயர் 13:15

ஆனால் நீங்கள் கேட்கலாம்: “இந்தப் பயங்கரமான சூழ்நிலையில் நான் எப்படி நன்றியுள்ளவனாக இருக்கமுடியும்?” இந்தச் சூழ்நிலை கர்த்தரிடமிருந்து வந்திருக்கிறது என்று மட்டுமே என்னால் சொல்லமுடியும். அவர் நிமித்தம் நாம் பாடுபடுவதே அவருடைய சித்தம்:

ஏனென்றால், கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்குமட்டும் இல்லை,
அவருக்காகப் பாடுகள்படுகிறதற்கும்
உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
பிலிப்பியர் 1:29

யோபு புத்தகத்தின் செய்தி இதுதானே? நீதிமான்கள் பாடுபடுகிறார்கள்; ஆனால் ஏன்? நாம் அவருடைய மகிமைக்கென்று படைக்கப்படவில்லையா (ஏசாயா 43:7)? நம்முடைய விசுவாசம் சோதிக்கப்பட்டுப் புடமிடப்படும்படி, அவர் தம்முடைய பிள்ளைகளைப் பாடுபட அனுமதிக்கிறார்:

இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்;
என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியம் என்பதால், இப்பொழுது கொஞ்சக்காலம்
பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.
அழிந்துபோகிற தங்கம் நெருப்பினாலே சோதிக்கப்படும்;
அதைவிட அதிக விலையுயர்ந்த உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு,
இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும்.
1 பேதுரு 1:6-7
நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று
ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார்.
நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே;
தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே;
கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும்.
ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள்
இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
ரோமர் 8:16-18

அன்பான வாசகரே, உங்களுக்கு என்ன தேவை என்று கர்த்தர் அறியாரா? வேதம் “துன்பப்படவேண்டியது அவசியம் என்பதால்… துக்கப்படுகிறீர்கள்” என்று சொல்லுகிறது. நீங்கள் இப்பொழுது துக்கப்படுகிறீர்கள் என்றால், உங்கள் விசுவாசத்தைப் புடமிட அது அவசியமாக இருப்பதால்தான். நம்முடைய வாழ்க்கையிலிருந்து பாவமான, மாம்சத்துக்குரிய காரியங்களைப் பிடுங்கி எறியும்படி அவர் நம்மில் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கமுடியாதா? நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும்; அதையே அவர் நம்மிடம் கேட்டிருக்கிறார். நாம் அவருடைய மகிமைக்கென்று படைக்கப்பட்டிருக்கிறோம்.

…தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம்
தீமையையும் பெறவேண்டாமோ…
யோபு 2:10

நீங்கள் இப்பொழுது ஒரு விவாகரத்தைக் கடந்துபோய்க்கொண்டிருந்தால், தீமையின் நடுவிலும் நீங்கள் நன்மையைக் காண்பீர்கள் என்று நம்பி ஜெபிக்கிறேன். நான் சொல்லக் கற்றுக்கொண்டதுபோல, என் விவாகரத்து எனக்கு நடந்தவைகளிலேயே மிகச் சிறந்த காரியம் என்று நீங்களும் சொல்லக்கூடும் என்று நம்புகிறேன். அதுவே என்னைக் கிறிஸ்துவிடம் கொண்டுவந்த பாதை.