ஒரு புத்தகத்தில் குறித்துவையுங்கள்!

“ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்;
அவைகள் ஒரு புத்தகத்தில் வரையப்பட்டு…”
யோபு 19:23
“…நான் உன்னுடன் சொன்ன எல்லா வார்த்தைகளையும்
ஒரு புத்தகத்தில் எழுதிக்கொள்.”
எரேமியா 30:2
“நீ பார்க்கிறதை ஒரு புத்தகத்தில் எழுதி…”
வெளிப்படுத்தின விசேஷம் 1:11
“இதை நினைவுகூரும்படி, நீ ஒரு புத்தகத்தில் எழுதி…”
யாத்திராகமம் 17:14

தேவன் நமக்குக் காட்டுவதை எழுதிவைக்க ஒரு குறிப்பேடு வைத்திருப்பது முக்கியம்; அப்பொழுது பின்னர் அந்தப் புத்தகத்தைத் திறந்துபார்த்து அவைகளை நினைவுகூர முடியும்.


“இப்பொழுது நீ போய்,
இது பிற்காலத்திற்கு என்றென்றைக்கும் இருக்கும்படி,
இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி,
ஒரு புத்தகத்தில் வரை.”
ஏசாயா 30:8

தேவன் ஏசாயாவிடம் “…ஒரு பலகையில் எழுதி…”, “…ஒரு புத்தகத்தில் வரை…” என்று சொன்னதற்குக் காரணம் இதுதான்: “…இது பிற்காலத்திற்கு என்றென்றைக்கும் இருக்கும்படி…”.

இந்த வேதப்பகுதியிலிருந்து, எழுதிவைப்பதன் நோக்கம் எதிர்காலத்திற்காகவே என்று அறிகிறோம். நாமோ வேறொருவரோ பின்னர், எதிர்காலத்தில் ஒரு நேரத்தில் அந்த வார்த்தைகளை வாசிக்கும்படியே நாம் அவைகளை எழுதிவைக்கிறோம்.


இதை நினைவுகூரும்படி எழுதிவையுங்கள்

“அமலேக்கியர்கள் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தார்கள். அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: “நீ நமக்காக மனிதர்களைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கியர்களோடு யுத்தம்செய்; நாளைக்கு நான் மலைமேல் தேவனுடைய கோலை என்னுடைய கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன்” என்றான். யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கியர்களோடு யுத்தம்செய்தான். மோசேயும், ஆரோனும், ஊர் என்பவனும் மலைமேல் ஏறினார்கள். மோசே தன்னுடைய கையை மேலே பிடித்திருக்கும்போது, இஸ்ரவேலர்கள் வெற்றிபெற்றார்கள்; அவன் தன்னுடைய கையைகீழே விடும்போது, அமலேக்கு வெற்றிபெற்றான். மோசேயின் கைகள் சோர்ந்துபோனது, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும், ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறுபக்கத்திலும் இருந்து, அவனுடைய கைகளைத் தாங்கினார்கள்; இந்த விதமாக அவனுடைய கைகள் சூரியன் மறையும்வரையும் ஒரே நிலையாக இருந்தது. யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் கூர்மையான பட்டயத்தாலே தோற்கடித்தான். பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “இதை நினைவுகூரும்படி, நீ ஒரு புத்தகத்தில் எழுதி, யோசுவாவின் காதிலே கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழே எங்கும் இல்லாதபடி நாசம் செய்வேன்” என்றார். மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பெயரிட்டு, “அமலேக்கின் கை யெகோவாவுடைய சிங்காசனத்திற்கு விரோதமாக இருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாக யெகோவாவின் யுத்தம் நடக்கும்” என்றான்.”
யாத்திராகமம் 17:8-16

யுத்தம் முடிந்து யோசுவா வெற்றிபெற்ற பின்பு, இப்படி எழுதியிருக்கிறது:

“பின்பு யெகோவா மோசேயை நோக்கி:
“இதை நினைவுகூரும்படி, நீ ஒரு புத்தகத்தில் எழுதி,
யோசுவாவின் காதிலே கேட்கும்படி வாசி…””
யாத்திராகமம் 17:14

இந்த எண்ணம் மோசேயிடமிருந்து வரவில்லை, தேவனிடமிருந்தே வந்தது. இந்த வெற்றி பின்னர் மறுபடியும் நினைவுகூரப்படும்படி, அது ஒரு புத்தகத்தில் பதிவுசெய்யப்படவேண்டும் என்று தேவன் விரும்பினார்.


யோசுவாவின் காதிலே கேட்கும்படி வாசி

இப்படிப்பட்ட நினைவுகூருதல் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை (யெகோவா செய்ததை நினைவுகூருவதற்காக) உபாகமம் 7:17-19-இல் பார்க்கிறோம்:

“அந்த மக்கள்கூட்டத்தினர் என்னைவிட எண்ணிக்கையில் அதிகமுள்ளவர்கள், நான் அவர்களைத் துரத்திவிடுவது எப்படி என்று உன் இருதயத்தில் சொல்லிக்கொள்வாயானால், உன் தேவனாகிய யெகோவா பார்வோனுக்கும் எகிப்தியர்கள் அனைவருக்கும் செய்ததையும், உன்னுடைய கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும், அற்புதங்களையும், உன் தேவனாகிய யெகோவா உன்னைப் புறப்படச்செய்து காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாக நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ யாரைப்பார்த்துப் பயப்படுகிறாயோ அவர்களுக்கும் உன் தேவனாகிய யெகோவா அப்படியே செய்வார்.”
உபாகமம் 7:17-19

தங்களுடைய எதிரிகளுக்குப் பயப்படாமல், அதற்குப் பதிலாகத் தேவன் ஏற்கனவே தங்களுக்குச் செய்ததை நினைவுகூர்ந்து, விசுவாசத்தில் உற்சாகமடையும்படி தேவன் மக்களுக்குக் கட்டளையிட்டார். எழுதிவைக்கப்பட்ட வார்த்தைகள் அவர்கள் நினைவுகூர உதவும்.

இந்த வேதப்பகுதிகளிலிருந்து, பின்வருவனவற்றை ஒரு புத்தகத்தில் எழுதிவைப்பது தேவனால் உண்டானது என்றும், நமக்குப் பயனுள்ளது என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம்:

  1. வேதவசனத்திலிருந்து தேவன் நமக்குக் காட்டுவது
  2. அந்த வேதப்பகுதிகளின் வெளிச்சத்தில் நாம் எடுக்கும்படி ஏவப்பட்ட உறுதியான அடிகள்
  3. அந்த அடிகளின் விளைவாகத் தேவன் நம்முடைய வாழ்க்கையில் நடப்பித்த காரியங்கள்.

ஆகவே, ஒரு குறிப்பேட்டை எடுத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் தினமும் தேவனைச் சந்திக்கும்போது அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவதை எழுதத் தொடங்குங்கள்; பின்னர் அதை மறுபடியும் நினைவுகூருங்கள்.

பல பத்தாண்டுகளாக இது எப்படி நடைமுறையில் வாழப்பட்டது என்பதற்கான உதாரணங்களுக்கு, psalm10218.com (ஆங்கிலத்தில்) பாருங்கள்; அது ஒரு மனிதன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய தியான நேரக் குறிப்பேடுகளின் தொகுப்பு.


தொடர்புடைய கட்டுரைகள்

← வசனத்தை உட்கொள்ளுதல் பக்கத்திற்குத் திரும்பு