தேவனுடைய வசனத்தை ஆராயுங்கள்

“நீ வெட்கப்படாத ஊழியக்காரனாகவும்
சத்திய வசனத்தை நிதானமாகப் பகுத்துப் போதிக்கிறவனாகவும்
உன்னை தேவனுக்குமுன்பாக உத்தமனாக நிறுத்தும்படி விழிப்பாக இரு.”
2 தீமோத்தேயு 2:15

ஆராய்ந்து படிக்கும் ஒரு முறை

வேதாகமத்தை ஆராய்ந்து படிக்கப் பல வழிகள் உள்ளன. கீழே விவரிக்கப்பட்டிருக்கும் முறை, ஒரு குழுவாகப் படிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கிறது. இது ஒரு வேதாகமப் படிப்புக்கு நன்றாகப் பொருந்துகிறது: ஒவ்வொருவரும் முதலில் தனியாக இதைச் செய்து, பின்பு தாங்கள் கற்றுக்கொண்டதைப் பகிர்ந்துகொள்ள ஒன்றுகூடுகிறார்கள். வேதாகமத்தின் சிறிய புத்தகங்களை வைத்து இதைச் செய்வது நல்லது (உதாரணமாக: தீத்து, 1 & 2 பேதுரு, 1 & 2 தீமோத்தேயு, யூதா போன்றவை); ஒவ்வொரு வாரமும் ஏறக்குறைய பத்து வசனங்களைப் படிக்கலாம்.

இன்னும் தெளிவாக விளக்கும்படி, 2 தீமோத்தேயு புத்தகத்தைப் படிக்கிற, வாரம் ஒருமுறை ஏறக்குறைய ஒரு மணிநேரம் சந்திக்கிற ஒரு குழுவை உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.

  1. வாசித்தல்

    ஒவ்வொரு வாரமும் முழு நிருபத்தையும் உங்களால் முடிந்த அளவு அதிக முறை வாசியுங்கள். ஒவ்வொரு வாரமும் சிறிய தனிப் பகுதிகளைப் பார்க்கும்போது, வேதவசனத்தை மறுபடியும் மறுபடியும் வாசிப்பது முழு நிருபத்தையும் அதன் சூழலில் மனதில் வைத்திருக்க உதவுகிறது.

    மறுபடியும் மறுபடியும் வாசிக்கும்போது வெவ்வேறு மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்துவது உதவியாக இருப்பதாகச் சிலர் கண்டிருக்கிறார்கள்.

  2. சொந்த வார்த்தைகளில் எழுதுதல்

    திரும்பத் திரும்ப வாசிப்பதோடு, முதல் சந்திப்புக்கு ஆயத்தமாக, அதிகாரம் 1-ஐ நம்முடைய சொந்த வார்த்தைகளில் எழுதுவோம்.

    வேதவசனத்தை உங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதுங்கள். “கர்த்தாவே, நீர் இங்கே என்ன சொல்ல விரும்புகிறீர்?” என்று நாம் கேட்கிறோம். இதன் நோக்கம் “வேதத்தின் தெளிவான அர்த்தத்தைத் தேடுவது”.

  3. ஒத்த வசனங்கள்

    அதிகாரம் 1-க்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வசனத்திற்கும் குறைந்தது ஒரு ஒத்த வசனத்தையாவது கண்டுபிடிக்க முயற்சிக்கவேண்டும்; ஒரு வசனத்தைத் தாங்கள் ஏன் அப்படி எழுதினார்கள் என்பதற்கு அது ஆதாரமாக இருக்கும். ஒத்த வசனங்களைத் தேடும் இந்த முயற்சி, வேதவசனத்தை வேதவசனத்தோடு ஒப்பிடவும், தங்களுடைய சொந்த விளக்கத்தைத் தவிர்க்கவும் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கிறது.

  4. தியானித்தல்

    ஒவ்வொருவரும் அந்த அதிகாரத்தைத் தங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதி, ஒத்த வசனங்களைக் கண்டுபிடித்த பின்பு, தேவனோடு தனியாக இருந்து, ஜெபித்து, அந்த வேதப்பகுதியைக் குறித்துத் தியானிக்க நேரம் ஒதுக்க முயற்சிக்கவேண்டும்; “கர்த்தாவே, இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்கவேண்டும். பின்வருபவை இருக்கின்றனவா என்று தேவனிடம் கேளுங்கள்:

    • அறிக்கையிடவேண்டிய அல்லது விலக்கவேண்டிய பாவங்கள்
    • பற்றிக்கொள்ளவேண்டிய வாக்குத்தத்தங்கள்
    • பின்பற்றவேண்டிய மாதிரிகள்
    • கைக்கொள்ளவேண்டிய கட்டளைகள்
    • அவரை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளுவதற்கான அறிவு

    அந்த வேதப்பகுதிக்கு, உறுதியான, நடைமுறையான பயன்பாடுகளையோ பதில்களையோ தேவனிடம் கேட்பதே இந்த நேரத்தின் நோக்கம். இதைப் பற்றி மேலும் அறிய தியானித்தல் பற்றிய கட்டுரையைப் பாருங்கள்.

  5. குழுவாகப் படித்தல்

    வாராந்திரச் சந்திப்புகளின்போது, ஜெபத்திற்குப் பின்பு, பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதியதை வாசிக்கலாம்; மற்றவர்கள் கவனமாகக் கேட்கவேண்டும். யாராவது வேதவசனத்தோடு எதையாவது கூட்டியிருக்கிறார்களா அல்லது அதிலிருந்து எதையாவது எடுத்துப்போட்டிருக்கிறார்களா என்று பார்ப்பதே நோக்கம். இங்கேயும் நாம் “வேதத்தின் தெளிவான அர்த்தத்தையே” தேடுகிறோம்.

    இரண்டாவதாக, குழுவினர் அந்த அதிகாரத்தின் ஒவ்வொரு வசனத்தையும் தனித்தனியாகப் பார்த்து, ஒவ்வொருவரும் தாங்கள் கண்டுபிடித்த ஒத்த வசனங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கவேண்டும்.

    மூன்றாவதாக, அந்த வேதப்பகுதியைக் குறித்துத் தியானித்தபோது தேவன் தங்களுக்குக் காட்டிய நடைமுறைப் பயன்பாட்டைப் பகிர்ந்துகொள்ள ஒவ்வொருவரும் ஊக்குவிக்கப்படவேண்டும்.

  6. மறுபார்வை

    மற்றவர்களுடைய சொந்த நடை விளக்கங்களையும், ஒத்த வசனங்களையும், நடைமுறைப் பயன்பாடுகளையும் கேட்ட பின்பு, “இரும்பை இரும்பு கூர்மையாக்கிடும்; அப்படியே மனிதனும் தன்னுடைய நண்பனைக் கூர்மையாக்குகிறான்” (நீதிமொழிகள் 27:17) என்பதை அனுபவித்தபின், இன்னும் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க, மறுபடியும் திரும்பிப்போய் அந்தப் பகுதியை இன்னொருமுறை பார்ப்பது உதவியாக இருக்கலாம்.

    அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11 (பெரோயா பட்டணத்தாரைக் குறித்து) இப்படிச் சொல்லுகிறது:

“அந்தப் பட்டணத்து மக்கள் வசனத்தை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டு,
விஷயங்கள் இப்படியிருக்கிறதா என்று
தினமும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால்,
தெசலோனிக்கேயில் உள்ளவர்களைவிட நற்பண்பு உடையவர்களாக இருந்தார்கள்.”
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11

பெரோயா பட்டணத்தாரைப்போல இருக்க நாம் முயற்சிப்போமாக!


தொடர்புடைய கட்டுரைகள்