வாரம் ஒருமுறை சபைக்குப் போவதும், எப்பொழுதாவது வேதவசனங்களை வாசிப்பதும் போதாதா என்ற எண்ணத்தில், “தேவனோடு உனக்குத் தினமும் ஐக்கியம் இருக்கவேண்டும் என்று நீ உண்மையாகவே நினைக்கிறாயா?” என்று ஒரு சகோதரர் கேட்ட கேள்விக்குப் பதிலாகப் பின்வரும் கடிதம் எழுதப்பட்டது.
சமீபத்தில் நீங்கள் கேட்ட கேள்வி எனக்கு உண்மையாகவே நன்மையாக இருந்தது. பல ஆண்டுகளாக நான் கர்த்தரோடு நெருக்கமான ஐக்கியத்தைத் தினமும் தேடிவருகிறேன்; அவருக்குக் கீழ்ப்படிந்து, அதன் மூலம் அவர்மேல் எனக்கு இருக்கும் அன்பை நிரூபிக்கும்படி, அவருடைய சத்தத்தைக் கேட்க வாஞ்சிக்கிறேன். இதைத் தினமும் செய்ய நான் ஏவப்பட்டிருக்கிறேன். ஆனால் சமீபத்தில் நீங்கள் அந்தக் கேள்வியைக் கேட்டபோது, “நான் ஏன் இப்படி நினைக்கிறேன்?” என்று என்னையே கேட்டுக்கொள்ளும்படி என் மனம் தூண்டப்பட்டது. அதுமுதல், நான் ஏன் இப்படி நினைக்கிறேன் என்பதைத் தொடர்ந்து ஆராய்ந்துவருகிறேன். என் இளமையில் யாரோ இப்படிப் போதித்ததைக் கேட்டதாலா? எங்கேயாவது இதை வாசித்தேனா? இந்த எண்ணங்களை நானே உருவாக்கிக்கொண்டேனா? அல்லது – முன்பு ஒருமுறை நான் அவருடைய வசனத்தைத் தியானித்தபோது, தம்முடைய மகனாகிய என்னோடு தேவனே பேசி, “…என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால்…” யோவான் 16:14 என்ற தம்முடைய வாக்குத்தத்தத்தை என்னில் நிறைவேற்றி, “…தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை…” எபேசியர் 1:17 எனக்குத் தந்ததால் இது வந்ததா? இப்பொழுது, இது அந்தக் கடைசிக் காரணம்தான் என்று நம்புகிறேன்!
“தேவனோடு உள்ள ஐக்கியம் தினமும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறாயா?” என்ற கேள்விக்குப் பதிலாக, பின்வரும் வேதப்பகுதிகளையும் அவைகளைக் குறித்த சில எண்ணங்களையும் தர விரும்புகிறேன். உங்கள் கேள்வியைக் குறித்து நான் சிந்தித்தபோது மறுபடியும் மறுபடியும் என் மனதில் வந்த எண்ணங்கள் இவைகளே.
இந்த வேதப்பகுதியின்படி, உண்மையான ஞானத்தைக் கேட்டு வாழ்வைக் கண்டடைவதற்கான வழி, எப்பொழுதும் (ஆங்கில KJV-இல்: “daily”, நாள்தோறும்) விழித்திருப்பதும் காத்திருப்பதுமே. உண்மையான ஞானம், சரியான விளக்கத்தின் மூலமாக மனித அறிவினால் மட்டும் பெறப்படுவதில்லை; வெளிப்படுத்துதலினாலேயே பெறப்படுகிறது! கிறிஸ்துவுக்குரியவைகளில் எடுத்து நமக்கு “…அறிவிப்பதினால்…” யோவான் 16:14 என்று தேவன் வாக்குக்கொடுத்திருக்கிறார்; இது “…ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவி…” என்றும், “…பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டும்…” எபேசியர் 1:17-19 என்றும் சொல்லப்படுகிறது.
மனிதர்களும் ராஜாக்களும் விரும்பக்கூடிய எல்லாவற்றிலும், தான் ஒன்றையே விரும்பினதாகத் தாவீது சொன்னான்! தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய சந்நிதியில் இருக்க அவன் விரும்பினான். கர்த்தருடைய மகிமையைப் பார்க்க அவன் விரும்பினான்; தேவனிடத்தில் காரியங்களைக் கேட்டு ஆராய்ந்தறிய அவன் விரும்பினான்.
“…இரவும் பகலும்…” என்ற சொற்றொடர், எனக்கு நேரம் கிடைக்கும்போதோ வசதியாக இருக்கும்போதோ எப்பொழுதாவது செய்வதைக் குறிப்பதாக எனக்குத் தோன்றவில்லை; மாறாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும், என் வாழ்நாளெல்லாம் “எப்பொழுதும்” செய்வதையே குறிக்கிறது.
இந்த ஆத்தும தாகத்தின் ஒரு படமாகத் தேவன் நமக்குள் வைத்திருக்கும் தண்ணீருக்கான தாகம் தினமும் வருகிறது! நான் விழித்தெழும் ஒவ்வொரு நாளும் எனக்குத் தாகமாக இருக்கிறது. நாம் ஒவ்வொரு நாளும் கொண்டிருக்கவேண்டிய ஆத்தும தாகத்தின் ஒரு படம் அல்லவா இது?
உங்கள் கேள்வியைக் குறித்து நான் சிந்தித்தபோது கர்த்தர் என் நினைவுக்குக் கொண்டுவந்த வசனங்களில் சில இவைகள். இவைகளைக் குறித்துச் சிந்திக்கும்போது, என் தேவனைத் தினமும், அதிகாலையிலும், இரவிலும்கூடத் தேட நான் தனிப்பட்ட முறையில் ஏவப்படுகிறேன்.
சகோதரரே, நான் ஏன் இப்படி நினைக்கிறேன் என்பதை மறுபடியும் ஆராய்ந்தபோது, என் கர்த்தர் உண்மையாகவே நான் அவருடைய சந்நிதியைத் தேடவேண்டும் என்று விரும்புகிறார் என்பதில் உறுதியாக இருக்கிறேன் – அவருடைய மகிமையைப் பார்க்கவும், அவரிடத்தில் ஞானத்தையும் வழிநடத்துதலையும் கேட்கவும் … தினமும்.
என்னைக் கூர்மையாக்கியதற்கு நன்றி (நீதிமொழிகள் 27:17).ஒரு உடன் ஊழியக்காரன்