“சக்கரத்தைக்” கொண்டு நம்முடைய நடையை ஆராய்தல்


சக்கரம்: நடுவில் அச்சாகக் கிறிஸ்து; ஆரக்கால்கள் வசனம், ஜெபம், ஐக்கியம், சாட்சி; வெளிவளையம் கீழ்ப்படிதல் – “செயலில் கீழ்ப்படியும் கிறிஸ்தவன்”.

நேவிகேட்டர்ஸ் (Navigators) அமைப்பின் நிறுவனரான, மறைந்த டாசன் ட்ராட்மன் (Dawson Trotman) அவர்களின் இந்த “சக்கர” விளக்கப்படம், கர்த்தரோடு நம்முடைய நடையை ஆராய்ந்து பார்க்க மிகவும் பயனுள்ள ஒரு கருவி. கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு சக்கரத்தைப் போன்றது என்று டாசன் கண்டார்; அதன் நடுவில் கிறிஸ்து இருக்கிறார், அது ஓடும் பாதை வாழ்க்கை. கிறிஸ்துவே நம்முடைய வாழ்க்கையின் மையம்; கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ அவரே நமக்குப் பெலன் தருகிறார். இயேசு மையத்தில் இல்லாமல் நம்மால் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ முடியாது. ஆரக்கால்கள், கிறிஸ்தவர்களாக நாம் செய்யவேண்டியவைகளைக் குறிக்கின்றன: வசனம், ஜெபம், ஐக்கியம், சாட்சி. கீழ்ப்படிதல் வெளிவளையம்; அது “வளையம் சாலையை (வாழ்க்கையை) தொடும் இடம்”. இயேசு நம்மிடம் கேட்ட எல்லாவற்றையும் நாம் செய்யும்போது, நம்முடைய சக்கரம் சீராக ஓடுகிறது. ஆனால் நம்முடைய ஆரக்கால்களில் ஒன்று குட்டையாக இருந்தால், சக்கரம் சமநிலை இழக்கிறது. அவ்வப்போது, கிறிஸ்தவர்களாக நம்முடைய நடையை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். நாம் எப்படி நடக்கிறோம் என்று ஆராய்ந்து பார்க்கச் சக்கரம் ஒரு பயனுள்ள வழி.


மையமாகிய கிறிஸ்து. நம்முடைய வாழ்க்கையின் மையத்தில் இயேசு கிறிஸ்து இருக்கவேண்டும். அச்சு இல்லாமல் சக்கரம் சுழலமுடியாது. அதுபோலவே, இயேசு கிறிஸ்து இல்லாமல் நம்மால் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழமுடியாது:
நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள்.
ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால்,
அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்;
என்னை அல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது.
யோவான் 15:5
கிறிஸ்து இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்யமுடியாததால், அவரே நம்முடைய முதன்மையான கவனமாக இருக்கவேண்டும். தாவீது ராஜா செய்த எல்லாவற்றிலும், ஒன்றையே மிக முக்கியமானதாக அவன் கருதினான்:
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
சங்கீதம் 27:4
சக்கரம் தன் சக்தியை அச்சுத்தண்டிலிருந்து பெறவேண்டியதுபோல, நாமும் இயேசு கிறிஸ்துவிடமிருந்து மட்டுமே பெலனைப் பெறமுடியும். நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவை முதலிடத்தில் வைக்கும்போது மட்டுமே, ஆவிக்குரிய எதையாவது நம்மால் செய்யமுடியும். கிருபாசனத்தண்டையில் நாம் தேவனோடு ஐக்கியம் கொள்ளவேண்டும்:
அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலுமிருந்து நான் இஸ்ரவேலர்களுக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடு சொல்லுவேன்.
யாத்திராகமம் 25:22
கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கான பெலனைப் பெறும்படி, நாம் தைரியமாகக் கிருபையின் சிங்காசனத்திடம் சேரவேண்டும் (எபிரெயர் 4:16). நமக்குத் தேவனோடு அனுதின ஐக்கியம் இருக்கிறதா?
  1. வசனம். நாம் தேவனுடைய வசனத்தை உட்கொள்கிறோமா? இந்த ஆரக்கால் ஐந்து வெவ்வேறு பகுதிகளைக் கொண்டது:

    1. கேட்டல். நாம் வசனத்தைக் கேட்கிறோமா?
    2. வாசித்தல். நாம் வசனத்தை வாசிக்கிறோமா?
    3. ஆராய்தல். நாம் வசனத்தை ஆராய்ந்து படிக்கிறோமா?
    4. தியானித்தல். நாம் வசனத்தைத் தியானிக்கிறோமா?
    5. மனப்பாடம் செய்தல். நாம் வசனத்தை மனப்பாடம் செய்கிறோமா?

  2. ஜெபம். நாம் செய்யவேண்டியபடி ஜெபிக்கிறோமா, தேவனுடைய சித்தத்தை அறிய நாடுகிறோமா? ஜெபிப்பதற்குக் குறைந்தது 3 வழிகளையும், 4 வெவ்வேறு வகையான ஜெபங்களையும் வேதாகமம் குறிப்பிடுகிறது.

    ஜெபிப்பதற்கான 3 வழிகள்:

    • இடைவிடாமல் ஜெபித்தல். நான் உணர்வோடு எப்பொழுதும் கர்த்தரிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேனா?
      இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள்.
      1 தெசலோனிக்கேயர் 5:17
    • மற்றவர்கள் முன்னிலையில் ஜெபித்தல். உதாரணமாக, சாப்பிடுவதற்கு முன்பு, பயணத்திற்கு முன்பு பாதுகாப்புக்காக, மற்றும் இப்படிப்பட்டவை.
      இப்படிச் சொல்லி. அப்பத்தை எடுத்து, தேவனை ஸ்தோத்தரித்து,
      அதைப் பிட்டுச் சாப்பிடத் தொடங்கினான்.
      அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:35
    • விழித்திருத்தல், அல்லது ஜெபத்திற்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு நேரம்.
      பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு,
      பேதுருவைப் பார்த்து: நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா?
      மத்தேயு 26:40
    ஜெபத்தின் நான்கு வெவ்வேறு வகைகள்:
    1. ஆராதனை (சங்கீதம் 146:1-2)
    2. அறிக்கையிடுதல் (1 யோவான் 1:9)
    3. நன்றிசெலுத்துதல் (எபேசியர் 5:20)
    4. விண்ணப்பங்கள்:
      • பிறருக்காக வேண்டுதல் (1 தீமோத்தேயு 2:1, எபேசியர் 6:18)
      • கோரிக்கைகள் (1 சாமுவேல் 1:27)
      • தனிப்பட்டவை (மத்தேயு 7:7)

  3. ஐக்கியம். தேவனைக் குறித்தும் அவருடைய வசனத்தைக் குறித்தும் நாமே பார்த்ததையும் கேட்டதையும் ஒருவருக்கொருவர் அறிவிப்பதே உண்மையான ஐக்கியம். தேவன் ஆவிக்குரியபிரகாரமாக நமக்குக் காட்டியதை, ஒரே சரீரமாக, சபையில் உள்ள மற்ற விசுவாசிகளோடு நாம் பகிர்ந்துகொள்கிறோமா?
    நீங்களும் எங்களோடு ஐக்கியம் உள்ளவர்களாகும்படி,
    நாங்கள் பார்த்தும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்;
    எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும்
    அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
    1 யோவான் 1:3
  4. சாட்சி. நம்முடைய இரட்சகரைக் குறித்து நாம் உலகத்திற்குச் சாட்சி கொடுக்கிறோமா? நாமே நற்செய்திக்குக் கீழ்ப்படிய ஆயத்தமாக இருக்கிறோமா? (இன்னும் அப்படிச் செய்யாத ஒருவருக்குச் சாட்சி கொடுப்பதற்கான ஒரு விரிவான உதாரணத்திற்கு, நீங்கள் விசுவாசமுள்ளவர்களோ என்று உங்களை நீங்களே சோதித்தறியுங்கள் என்ற கட்டுரையைப் பாருங்கள்.)
    பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து,
    எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும்,
    எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்
    அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8
  5. கீழ்ப்படிதல். இங்கேதான் வளையம் சாலையைத் தொடுகிறது. நம்முடைய வாழ்க்கைத் தீர்மானங்களிலும், நம்முடைய பணத்தை உக்கிராணக்காரர்களாகக் கையாளுவதிலும் நாம் தேவனுடைய வசனத்திற்குக் கீழ்ப்படிகிறோமா?
    நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.
    யோவான் 14:15
    இப்பொழுதே நாம் செய்யவேண்டும் என்று தேவன் நம்மிடம் எதைக் கேட்கிறார்?